37 மாவட்டத்தில் 100 உலர்களங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்கு இலவசம்
37 மாவட்டத்தில் 100 உலர்களங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்கு இலவசம்
ADDED : ஜூலை 28, 2024 12:34 AM
சென்னை:விவசாயிகள் பயன்பாட்டிற்காக, 37 மாவட்டங்களில், 100 உலர்களங்கள் அமைக்கும் பணியில், வேளாண் வணிகப்பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை உலர வைப்பதற்கும், தரம் பிரிப்பதற்கும் பல மாவட்டங்களில் இடவசதி இல்லை. சாலைகளிலும், மக்கள், கால்நடைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் அவற்றை உலர்த்துவதால், பொருட்கள் வீணாகிறது.
எனவே, விவசாய பொருட்கள் இழப்பை தடுக்கும் வகையில், வேளாண் வணிகத்துறை வாயிலாக, 2021ம் ஆண்டு முதல் உலர்களங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இரண்டு ஆண்டுகளில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 185 உலர்களங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, தரம் பிரிப்பு கூடத்துடன், 100 உலர் களங்களை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், திருவள்ளூர், கடலுார், மதுரை மாவட்டங்களில் தலா, ஐந்து இடங்களிலும், செங்கல்பட்டு, திருச்சி, விழுப்புரம், திருவாரூர், துாத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா நான்கு இடங்களிலும் உலர்களங்கள் கட்டப்படுகின்றன.
ஒவ்வொரு பணிக்கும் குறைந்த பட்சம், 10 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டு வருகிறது.
இந்த உலர்களங்கள், ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
உலர்களங்கள் அமைக்கும் பணியை, 2024 - 25ம் ஆண்டும் தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

