ADDED : மார் 09, 2025 08:15 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, பட்டப்பகலில் பெண் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, 100 பவுன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை, புறவடை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வீட்டில், ஷேர்லின்பெல்மா, 44, என்பவர் வசித்து வருகிறார். இவர், நல்லம்பள்ளி அடுத்துள்ள கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. அவருடைய அப்பா தேவதாஸ் அரசு ஊழியராக இருந்து இறந்த நிலையில், தாய் மேரியும் பணி ஒய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை ஆவார். மேரி, ஷேர்லின்பெல்மா வீட்டில் தனியாக வசித்து வந்தனர். மேரி மருத்துவ சிகிச்சைக்காக, வேலூருக்கு சென்ற நிலையில், வழக்கம்போல் ஷேர்லின்பெல்மா வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார்.
பள்ளி முடிந்தபின் நேற்று மாலை மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று அவர் பார்த்தபோது, பிரோவில் இருந்த அவருடைய, 70 பவுன் நகை, தாய் மேரியின், 30 பவுன் நகை என, 100 பவுன் நகை மற்றும், 1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.
அதியமான்கோட்டை போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.