10,000 கி.மீ., ஊரக சாலைகள் மேம்படுத்த ரூ.4,000 கோடி ஒதுக்கீடு
10,000 கி.மீ., ஊரக சாலைகள் மேம்படுத்த ரூ.4,000 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 25, 2024 12:23 AM
சென்னை: ''இரண்டு ஆண்டுகளில், 10,000 கி.மீ., நீளமுள்ள ஊரக சாலைகள், 4,000 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்,'' என, சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அவரது அறிவிப்பு:
முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம், 2023 ஜன., 13ல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில், 10,000 கி.மீ., நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த, 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது வரை 8,120 கி.மீ., நீளமுள்ள ஊரக சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில், 16,596 கி.மீ., நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்க, திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு, 9,324 கோடி ரூபாய். இதை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் இரண்டு ஆண்டுகளில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் வழியாக கூடுதலாக, 10,000 கி.மீ., நீளமுள்ள ஊரகச் சாலைகள், 4,000 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.