ADDED : மே 16, 2024 09:46 PM
சென்னை:சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் உட்பட, 11 விரைவு ரயில்களின் சேவை ஜூலை முதல் வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், வாரத்திற்கு ஒரு முறை அல்லது வாரம் இரு முறை என வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு பல வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை நீட்டித்து இயக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் - ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், சென்னை எழும்பூர் - சந்திரகாச்சி முன்பதிவு இல்லாத ரயில், தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - திப்ரூகர், கொச்சுவேலி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, கோவை - பகத் கீ கோதி உட்பட 11 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, இரு மார்க்கத்திலும் ஜூலை முதல் வாரம் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்து, பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை டூ விசாகப்பட்டினம்
கூட்ட நெரிசல் கருதி, சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து, வரும் 27, ஜூன் 3, 10, 17, 23 மாலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, ஜூன் 4, 11, 18, 25 காலை 10:00க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 1:00 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
4 ரயில்கள் ரத்து
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடியில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளது. இதனால், இந்த தடத்தில் செல்லும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி - ராமேஸ்வரம் காலை 7:05 மணி மற்றும் ராமேஸ்வரம் - திருச்சி மதியம் 2:35 மணி ரயில்கள், நாளை மறுதினம் ரத்து செய்யப்படுகின்றன
காரைக்குடி - திருச்சி மாலை 3:30 மணி மற்றும் திருச்சி - காரைக்குடி மாலை 6:20 மணி ரயில்கள், நாளை மறுதினம் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

