போதை பொருள் கடத்தியதாக பணம் பறிப்பு 5 மாதங்களில் 1,330 வழக்குகள் பதிவு
போதை பொருள் கடத்தியதாக பணம் பறிப்பு 5 மாதங்களில் 1,330 வழக்குகள் பதிவு
ADDED : மே 30, 2024 01:37 AM
சென்னை:வெளிநாட்டிற்கு உங்கள் பெயரில், கூரியரில் போதை பொருள், புலித்தோல், 'பார்சல்' அனுப்பப்பட்டு இருப்பதாக கூறி, பணம் பறிக்கும் மோசடி தொடர்பாக, தமிழகத்தில் ஐந்து மாதங்களில், 1,330 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
மர்ம நபர், உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு, 'பெடக்ஸ் கூரியர்' நிறுவனத்தில் இருந்து பேசுவது போல தெரிவிப்பர்.
'உங்கள் பெயரில், மும்பை அந்தேரியில் இருந்து, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பார்சலில், கஞ்சா, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர், புலித்தோல், பிற போதை பொருள், 10 போலி பாஸ்போர்ட், 20 ஏ.டி.எம்., கார்கள் உள்ளன. அதுதொடர்பாக, மும்பை சைபர் கிரைம் போலீசார், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இணைப்பை துண்டிக்காமல் இருக்கவும்' என்று கூறுவர்.
'நான் அப்படி எந்த பார்சலையும் அனுப்பவில்லை' என, நீங்கள் சொல்வதற்குள், போலீஸ் வாக்கி டாக்கி சத்தம் கேட்கும். இன்ஸ்பெக்டர் என, வேறு ஒரு நபர் பேசுவார். அவர் உங்கள் பெயரை உறுதி செய்து, ஆதார் எண்ணை பெறுவார்.
பின், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாடு முழுதும், 120 வங்கிகளில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் ஹவாலா பணம் பெறப்பட்டு இருப்பதாக கூறுவர்.
'விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் தான் எங்கள் போலீசார் உள்ளனர். அவர்கள் உங்களை உடனே கைது செய்து விடுவர்' என, மிரட்டுவர்.
'எங்கள் உயர் அதிகாரி உங்களை விசாரிப்பார்' எனக்கூறி, ஸ்மார்ட் போனில், 'ஸ்கைப்' செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்வார். அதற்கான, 'ஐடி'யை கேட்டுப்பெற்று, விசாரணை முடியும் வரை தொடர்பை துண்டித்து விடக்கூடாது என்றும் மிரட்டுவர்.
உங்களை, 'ஆன்லைன்' வாயிலாக கைது செய்து, தனி அறையில் முடக்கி விடுவர். உங்கள் பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு, நிரந்தர வைப்பு தொகையென, 25 லட்சம் ரூபாயை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்பர்.
அந்த பணத்தை உடனடியாக ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து, மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கே செலுத்திவிடும் என்பர். பதற்றத்தில் இருக்கும் உங்களை பயன்படுத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, உடனடியாக எங்கள் வங்கி கணக்கிற்கு, 5 - 10 லட்சம் ரூபாயை அனுப்ப வேண்டும் என்று கூறுவர்.
போலியாக தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை, கைது வாரன்ட், பத்திரிகை செய்தி குறிப்பு, அறிக்கைகளை அனுப்பி வைப்பர். உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தி, பணம் பறித்த பின் தொடர்பை துண்டித்து விடுவர்.
குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து, இத்தகைய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக, தமிழகத்தில் ஐந்து மாதங்களில், 1,330 வழக்குகள் பதிவாகி உள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பறிபோய் உள்ளது.
செய்யாத குற்றத்திற்கு எதற்காக பதற்றம் அடைய வேண்டும். போலீசார், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் என, எவரும், 'வீடியோ' அழைப்பில் விசாரிப்பது இல்லை. அப்படி இருக்கும் போது செய்யாத குற்றத்திற்காக, நீங்கள் ஏன் பணத்தை இழக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.