14 சட்ட மசோதாக்களுக்கு 30 நாளுக்குள் கவர்னர் ஒப்புதல்
14 சட்ட மசோதாக்களுக்கு 30 நாளுக்குள் கவர்னர் ஒப்புதல்
ADDED : ஜூலை 20, 2024 12:42 AM
சென்னை : தமிழக சட்டசபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட, 14 சட்ட மசோதாக்களுக்கும், கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார்.
தமிழக அரசு சார்பில், சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா, 'நீட்' நுழைவுத் தேர்வு விலக்கு மசோதா போன்றவற்றை, கடந்த ஆண்டு கவர்னர் ரவி திருப்பி அனுப்பினார்.
கால நிர்ணயம்
இது தொடர்பாக, அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
'சட்டசபைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, மாநில கவர்னர்கள் ஒப்புதல் வழங்க, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய வேண்டும்' என, மத்திய அரசையும், ஜனாதிபதியையும் வலியுறுத்தி, தமிழக சட்டசபையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா, நீட் விலக்கு மசோதா போன்றவற்றை, இரண்டாவது முறையாக, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பியதை தொடர்ந்து, நீட் விலக்கு மசோதாவை, ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பினார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
அரசிதழில் வெளியீடு
அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் நிலவும் சூழலில், கடந்த மாதம் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது.
இதில், நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த, விதிமுறைகளை தளர்த்தும் மசோதா, கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் மசோதா உட்பட, 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.
இந்த 14 மசோதாக்களுக்கும், ஒரு மாதத்திற்குள் கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அவை அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

