ADDED : மே 07, 2024 09:52 PM
சென்னை:மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஆட்சியில் தமிழகத்தின் டெல்டா பகுதியில், 12 மணி நேரமும்; பிற பகுதிகளில் ஒன்பது மணி நேரமும் தான் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த அரசு, 2021ல் பதவி ஏற்றது முதல், விவசாயத்திற்கான மும்முனை மின்சாரத்தை தினமும், 12 முதல், 16 மணி வரை வழங்கி வருகிறது.
கடந்த இரு ஆண்டுகளில், 1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டுக்கான விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கோடை வெயிலால் மாநிலம் முழுதும் சில தினங்களாக மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின் பயன்பாடு அதிகம் இருப்பதால், சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் கட்டமைப்புகளில், அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகின்றன. அவற்றை முற்றிலுமாக நிவர்த்தி செய்து, டெல்டா மாவட்ட விவசாய இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்ய கூடுதலாக, 3,200 டிரான்ஸ்பார்மர்கள் நிறுவியதால், தாழ்வழுத்த மின் பாதையின் நீளம் குறைந்து, மின் இழப்பு வெகுவாக குறைந்துள்ளது. கிராமங்கள் உட்பட கடைநிலை நுகர்வோர் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின் வினியோகம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

