ADDED : பிப் 24, 2025 02:56 AM

கூடலுார்: விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட நீர் குட்டையில் விழுந்து, இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலுார் நடுவட்டம், டி.ஆர்., லீஸ் பகுதியை சேர்ந்த சதீஷ் - ஷாலினி தம்பதியின் குழந்தைகள் நிதிஷ், 5, பிரனிதா, 3. சதீஷ் அப்பகுதியில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று காலை, ஷாலினி தன் இரண்டு குழந்தைகளுடன் விவசாய நிலத்துக்கு சென்று, நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும், காலை, 10:30 மணியளவில் மாயமாகின.
தேடி பார்த்தபோது, விவசாய நிலத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட நீர் குட்டையில், குழந்தைகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது. ஷாலினி குழந்தைகளை மீட்டு, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அவர்களை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தார். நடுவட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

