பென்ஷன் திட்டத்தில் இணைக்க கோரி 2 கட்டப்போராட்டம்; ஊராட்சி செயலர்கள் சங்க தலைவர் தகவல்
பென்ஷன் திட்டத்தில் இணைக்க கோரி 2 கட்டப்போராட்டம்; ஊராட்சி செயலர்கள் சங்க தலைவர் தகவல்
ADDED : ஜூலை 22, 2024 12:44 AM
கம்பம் : ''பென்ஷன் திட்டத்தில் தங்களையும் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 2 கட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்'' என, கம்பத்தில் தமிழக ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், ஒன்றியங்களில் பணிபுரியும் பதிவுறு எழுத்தர்கள் கால முறை சம்பள நடைமுறைக்கு 2018ல் கொண்டு வரப்பட்டனர்.-
ஆனால் இன்று வரை ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் இணைக்கவில்லை.
சிறப்பு கால முறை சம்பளம் பெற்று வந்த போது வழங்கப்பட்ட ஒய்வூதியம் ரூ.2 ஆயிரம் மட்டுமே இன்று வரை வழங்கப்படுகிறது.
மாநில நிதிக்குழு மானியத்தில் இதே நடைமுறையில் சம்பளம் பெறும் பதிவுறு எழுத்தர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால் அதே சம்பள விகிதத்தில் சம்பளம் வாங்கும் ஊராட்சி செயலர்கள், இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2018 முதல் கடந்த 7 ஆண்டுகளாக இச்சலுகை விடுபட்டுள்ளது பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆக., 21ல் மாநிலம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தந்த கலெக்டர் அலுவலகங்கள் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
2வது கட்டமாக செப்.,27 ல் சென்னை பனகல் மாளிகை முன் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

