ADDED : பிப் 10, 2025 05:25 AM
சென்னை; ''தமிழகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. கடந்த மாதம் மட்டும், 22 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன,'' என, அம்பேத்கர் மக்கள் கழக அமைப்பாளர் இளையபாபு தெரிவித்தார்.
அவர், கூறியதாவது: தமிழகத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தாக்கப்படுவதும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில், வேங்கை வயல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், இன்றளவும் நிலுவையில் இருப்பது வேதனையாக உள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என, அனைத்து நிலைகளிலும், தமிழகம் முன்னேறிய மாநிலமான போதும், பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மட்டும் குறையவில்லை.
இதை உறுதிப்படுத்தும் வகையில், ஜனவரியில் மட்டும் தமிழகத்தில், 22 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் பட்டியிலினத்தவர் காளை புறக்கணிப்பு; துாத்துக்குடியில் பட்டியலின மக்கள் செல்லும் பொது வழியில் தீண்டாமை சுவர் அமைப்பு; உசிலம்பட்டியில் தலித் இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிப்பு என, இம்மக்களுக்கு எதிரான ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
இவற்றின் மீது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

