ADDED : ஜூன் 23, 2024 04:17 AM
சென்னை : “கடந்த மூன்று ஆண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, 371 திட்டங்களால், 2.59 கோடி விவசாயிகள் பயனடைந்து உள்ளனர்,” என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று வேளாண் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
கடந்த ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் அதிகளவில் நடந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக, விவசாயிகள் போராட்டம் இல்லாமல் ஆட்சி நடக்கிறது. விவசாயிகளிடம் கருத்து கேட்டு, பிரச்னைகளை உள்வாங்கி, அதற்கு ஏற்ப திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம்.
இதனால், விவசாயிகள் சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண் துறைக்கு, 27,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், 371 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இவற்றின் வாயிலாக, 2.59 கோடி விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். உணவு தானிய உற்பத்தி, 1.15 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. வேளாண் சாகுபடி பரப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விவசாயத்திற்கு, 23.89 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக மானியாக, 19,751 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. நெல் கொள்முதலுக்காக கூடுதலாக, 986 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், 16.63 லட்சம் விவசாயிகள் பயனடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

