ADDED : மே 13, 2024 05:21 AM
சென்னை : தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 92 இடங்களில், 3,197 கோடி ரூபாயில், 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளன.
தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செய்திக்குறிப்பு:
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில், வாரியம் வாயிலாக, 92 திட்ட பகுதிகளில், 3,197 கோடி ரூபாயில், 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில், 1.68 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மாநிலம் முழுதும், 2,078 கோடி ரூபாயில், 69,701 புதிய தனி வீடுகள் கட்ட, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. சிதிலம் அடைந்த, 7,582 குடியிருப்புகளை இடித்து விட்டு, அதே இடத்தில், 1,608 கோடி ரூபாயில், 9,522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும், 76,434 குடியிருப்புகளின் உறுதித்தன்மையை மேம்படுத்தும் பணிகள், 59.8 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு உள்ளன.
சென்னை உள்ளிட்ட நகரங்களில், 31,239 குடியிருப்புகள், 82.5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.