ADDED : செப் 23, 2011 11:59 PM
மதுரை: மதுரையில் கார் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி 'வரிச்சியூர்' செல்வத்தை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
கடந்தாண்டு, மதுரை அண்ணா நகரில் அடுத்தடுத்து கார்களை திருடியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தவிர, கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், செல்வம் தலைமறைவானார். அவர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. நேற்று மாலை அண்ணா நகர் வந்த செல்வத்தை, உதவி கமிஷனர் வெள்ளைதுரை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
என்னென்ன வழக்குகள்: செல்வம் மீது, தமிழகம் முழுவதும் பல வழக்குகள் உள்ளன. துப்பாக்கி வைத்திருந்ததாக மதுரை எஸ்.எஸ்., காலனியிலும், போலீசாரை தாக்கியதாக பெருங்குடியிலும், வழிப்பறியில் ஈடுபட்டதாக சிவகங்கை மற்றும் கருப்பாயூரணி ஸ்டேஷன்களிலும் வழக்குகள் உள்ளன. தென்காசியில் ஆள் கடத்தல் வழக்கு, சென்னையில் பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வழக்கு, பழநியில் கார் திருட்டு வழக்கும் இவர் மீது உள்ளன.