4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை
4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் எஸ்.ஆர்.சேகரிடம் விசாரணை
ADDED : மே 22, 2024 04:04 AM

கோவை : சென்னை ரயில்வே ஸ்டேஷனில், 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் குறித்து, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏப்., 6ல் நெல்லை எக்ஸ்பிரசில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாயை தாம்பரம் போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர். பணத்தை எடுத்து சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்கள், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனோடு தொடர்புடையவர்கள் என்பதால், பிடிபட்டது நயினார் நாகேந்திரனுக்காக கொடுத்து அனுப்பிய பணம் என கூறப்பட்டது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட நிலையில், பா.ஜ., கட்சிப் பணம் என்ற தகவலும் வெளியானது.
இது குறித்து விசாரிக்க, பா.ஜ., அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட மூவருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், கோவை கணபதி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சேகர் இல்லத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று திடீரென விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது.
இது குறித்து, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது:
ரயிலில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது குறித்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் கொடுத்தனர். கட்சிப்பணிகள் இருப்பதால், 30ம் தேதி வரை வர இயலாது; அதன் பின் தேதி குறிப்பிட்டால், வர இயலும் எனத் தெரிவித்தேன்.
சி.பி.சி.ஐ.டி.,யிடம் '10 நாட்கள் அவகாசம் தேவை' என கடிதம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். டில்லி செல்ல இன்று கிளம்பிக் கொண்டு இருந்தேன்.
அப்போது, சென்னை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., சசிதரன் தலைமையில், போலீசார் எவ்வித முன்னறிவிப்புமின்றி விசாரிக்க வந்தனர். சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன.
தமிழக அரசின் அழுத்தம் காரணமாக, பரபரப்பை ஏற்படுத்த போலீசார் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் விசாரணை கூடாது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்; பா.ஜ., மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என, போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.
விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. 4 கோடி ரூபாய்க்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறிவிட்டோம். இருப்பினும், ஒரு வாரமாக 4 கோடி ரூபாய் பா.ஜ.,வின் பணம் என, தவறாக சித்தரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

