UPDATED : ஏப் 17, 2024 11:26 PM
ADDED : ஏப் 17, 2024 11:25 PM

சென்னை : நாளை நடக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அதனால் உஷாரான 'குடி'மகன்கள், அதிகளவில் மது வகைகளை வாங்கி இருப்பு வைத்ததால், நேற்று முன்தினம் மட்டும் 400 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. தினமும் சராசரியாக 150 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அவற்றை விட அதிகமாகவும் மது விற்பனை உள்ளது.
குடியரசு தினம், திருவள்ளுவர் தினம் உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் தான் மதுக் கடைகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானது. அன்று முதல் மது விற்பனை அதிகரிக்கத் துவங்கியது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தங்களுடன் தினமும் பிரசாரத்திற்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு, இரவில் மது பாட்டில்களை தாராளமாக வழங்கினர். இதனால், மதுக் கடைகளில் தினசரி விற்பனை, வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளதால், நேற்று முதல் நாளை வரை, மூன்று நாட்களுக்கு மதுக் கடைகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று நாட்களும் மதுக் கூடங்கள், தனியார் நடத்தும் 'கிளப்' மற்றும் நட்சத்திர ஹோட்டல்களிலும், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான 'குடி'மகன்களும், அரசியல் கட்சியினரும் மூன்று நாட்கள் விடுமுறையால், தங்களுக்கு தேவையான மது வகைகளை நேற்று முன்தினமே அதிகளவில் வாங்கினர். அதனால், நேற்று முன்தினம் மதியம் மதுக் கடைகள் திறந்தது முதல், இரவு மூடப்படும் வரை கூட்டம் அலைமோதியது. அன்று ஒரே நாளில் மட்டும், 400 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.
சட்ட விரோதமாக மதுக் கடைகளை திறப்பது, அதை ஒட்டிய மதுக் கூடங்கள் மற்றும் மதுக் கடைகளுக்கு அருகில் உள்ளிட்ட இடங்களில் மது வகைகள் விற்பதை தடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இருப்பினும், நேற்று மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சென்னை உட்பட பல இடங்களில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடங்களில், முறைகேடாக சரக்கு பாட்டில்கள் விற்கப்பட்டன.
ஒரு பாட்டிலுக்கு அதிகபட்ச சில்லரையை விட, 100 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டது. இதை, அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

