கனிமம் கடத்திய 60 வாகனம் பறிமுதல்; 2 கிரஷருக்கு 'சீல்'
கனிமம் கடத்திய 60 வாகனம் பறிமுதல்; 2 கிரஷருக்கு 'சீல்'
ADDED : மார் 10, 2025 06:53 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாதத்தில், அனுமதியின்றி கனிமவளங்களை ஏற்றிச்சென்ற, 60 வாகனங்களை சிறப்பு குழுவினர் பறிமுதல் செய்து, இரண்டு கிரஷர்களுக்கு 'சீல்' வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மணல், கற்கள், கிரானைட் உள்ளிட்டவை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல உரிய நடைசீட்டும், 50 சதவீதம் பசுமை வரியும் செலுத்த வேண்டும். அனுமதியின்றி கனிம வளங்களை எடுத்து செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அனுமதி பெறாத குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய், போலீஸ் மற்றும் கனிமவளத்துறை அலுவலர் கொண்ட எட்டு சிறப்பு குழு, ஆர்.ஐ., தலைமையில், 11 சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள், பிப்., 4 முதல் மார்ச், 7 வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை, குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டது.
இதில் அனுமதியின்றி கனிமவளம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்படி கனிமவளத்துறையினர் ஒன்பது வாகனங்கள், போலீசார் ஒன்பது வாகனங்கள், வருவாய் துறையினர், 42 வாகனங்கள் என, 60 வாகனங்கள் பறிமுதல் செய்யதனர். இதேபோல் பர்கூர் தாலுகாவில் மோடிகுப்பம், புலிகுண்டா, தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளி, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திருட்டுத்தனமாக கறுப்பு கிரானைட் வெட்டி எடுத்ததை கண்டறிந்து, தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து ஐந்து வழக்குகளும் பதிவு செய்தனர்.
சூளகிரி தாலுகாவில் புக்கசாகரம் மற்றும் ஓசூர் தாலுகா ஆலுாரில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாமல், சேமிப்பு கிடங்கை இயக்கிய இரு கிரஷர்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், ''கனிமவளங்களை உரிய அனுமதிச்சீட்டு, பசுமை வரி செலுத்தாமல், கர்நாடகாவுக்கு எடுத்து செல்லும் வாகனங்களை, சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.