சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக 8 பேர்: கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக 8 பேர்: கொலீஜியம் பரிந்துரை
ADDED : செப் 10, 2024 10:54 PM
புதுடில்லி:சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேர் மற்றும் மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று பேர் உட்பட மொத்தம் எட்டு பேரை, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, உயர் நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரை, கவர்னர் மற்றும் முதல்வரின் ஒப்புதலுக்கு பின் 2024, ஏப்., 29ல் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று கூடி அந்த பரிந்துரையின் மீது தீர்மானம் நிறைவேற்றியது.
அதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, கே.கே. ராமகிருஷ்ணன், கலைமதி, கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், மரியா கிளீட் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளது.