குமரி கடலில் மூழ்கி 8 பேர் பலி; ஐந்து பேர் பயிற்சி டாக்டர்கள்
குமரி கடலில் மூழ்கி 8 பேர் பலி; ஐந்து பேர் பயிற்சி டாக்டர்கள்
ADDED : மே 06, 2024 11:41 PM

நாகர்கோவில் : திருச்சி தனியார் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றிய நெய்வேலி -- காயத்ரி, 25, கன்னியாகுமரி மாவட்டம் - சர்வதர்ஷித், 23, திண்டுக்கல் பிரவின்ஷாம், 23, தஞ்சாவூர் - சாருகவி, 23, ஆந்திரா வெங்கடேஷ், 24, ஆகியோர் உட்பட 12 பேர், வேன் மூலம் நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் தங்கிய அவர்கள் நேற்று காலை திற்பரப்பு அருவிக்கு சென்றனர். அங்கு தண்ணீர் குறைவாக விழுந்ததால், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு ஆறு பேர் கடலில் இறங்கி கால் நனைத்து கொண்டிருந்தனர். மற்ற ஆறு பேர் கடற்கரையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் வந்த பெரிய அலை கடலுக்குள் நின்று கொண்டிருந்த ஆறு பேரையும் இழுத்துச் சென்றது.
இதை பார்த்த மற்ற ஆறு பேரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் கடலில் குதித்து சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற நான்கு பேரையும் அலை கடலுக்குள் இழுத்து சென்றது. மீட்கப்பட்ட இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சர்வ தர்ஷித், 23, இறந்தார்.
இதைத்தொடர்ந்து குளச்சல் கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின் வெங்கடேஷ், பிரவின் ஷாம், காயத்ரி, சாருகவி ஆகியோர் உடல்களை மீட்டனர்.
சென்னை சூளைமேடு, வில்லிவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 20 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். குளச்சல் அருகே கோடி முனை பகுதியில் உள்ள துாண்டில் வளைவிலும், பாறையிலும் சிலர் ஏறி நின்றனர்.
அப்போது வந்த பெரிய அலை ஆறு பேரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. உள்ளூர் மீனவர்கள் கடலில் குதித்து, நான்கு பேரை உயிருடன் மீட்டனர். சூளைமேட்டை சேர்ந்த வெஜீஸ், 54, மனோஜ் குமார், 25, ஆகியோர் இறந்தனர்.
அதுபோல, புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பிரேமதாஸ் மகள் ஆதிஷா, 7, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு தேங்காப்பட்டணம் துறைமுகப் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, பெரிய அலை சிறுமியை கடலுக்குள் எடுத்துச் சென்றது. நேற்று இவரது உடல் மீட்கப்பட்டது.
இதற்கிடையே, கடலில் மூழ்கி இறந்த, ஐந்து மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் குடும்பத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல். தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.