ADDED : ஜூன் 09, 2024 02:40 AM
சென்னை: 'கூட்டுறவு விற்பனை இணையம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 92,100 டன் உரம் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும், கூட்டுறவு துறையின் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, வேளாண் பணிகளுக்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையுள்ள நடப்பு கரீப் பருவத்தில், யூரியா, 30,000 டன்; டி.ஏ.பி., உரம் 15,000 டன்; எம்.ஓ.பி., 9,200 டன்; காம்ப்ளக்ஸ், 21,600 டன் என, மொத்தம், 75,800 டன் சங்கங்களில் இருப்பில் உள்ளது.
மேலும், 'டான்பெட்' எனப்படும், கூட்டுறவு விற்பனை இணைய கிடங்குகளில், யூரியா, 4,500 டன்; எம்.ஓ.பி., 3,700 டன்; டி.ஏ.பி., 2,700 டன்; காம்பளக்ஸ், 5,400 டன் என, மொத்தம், 16,300 டன் உரம் இருப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர, கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பயிர் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை பெற்று, விவசாயிகள் பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

