கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
ADDED : மே 30, 2024 01:43 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை, 10 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, கொளப்பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு ஆறு யானைகள் முகாமிட்டன. அதிகாலை, 2:30 மணிக்கு யானைகள் பிளிறும் சப்தம் கேட்டு, மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர், 4:00 மணிக்கு வந்து பார்த்த போது, சண்முகநாதன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் கும்பலாக நின்று யானைகள் பிளிறின. வனக்குழுவினர் சப்தம் எழுப்பி யானை கூட்டத்தை விரட்டினர். அதில் ஒரு பெண் யானை மட்டும் அங்கிருந்து அகல மறுத்து நின்றிருந்தது.
கிணற்றில் குட்டி யானை
சிறிது நேரம் அந்த யானை அருகில் இருந்த தோட்டத்திற்குள் சென்ற நிலையில் வன குழுவினர் கிணற்றை எட்டி பார்த்த போது, குட்டி யானை விழுந்து தத்தளிப்பது தெரிந்தது.
கிணற்றை சுற்றி வனத்துறையினர் நின்றதை பார்த்த தாய் யானை ஆக்ரோஷமடைந்து, வனத்துறையினரை தாக்க முயன்றது. யானையிடமிருந்து தப்பிய வன குழுவினர் சண்முகநாதன் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றனர்.
எனினும், கோபம் தாளாமல் ஜன்னல் கண்ணாடி மற்றும் சமையலறை மேல் கூரை மற்றும் சுவரை இடித்து தள்ளியது. அருகில் இருந்த மற்றொரு வீட்டிலும் சமையலறை மற்றும் சுவரை இடித்து தள்ளியது. வீட்டிற்குள் இருந்த மூவர், கட்டிலுக்கு அடியில் படுத்து உயிர் தப்பினர்.
யானை அங்கிருந்து சென்ற பின், காலை, 9:00 மணிக்கு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழி தோண்டி கிணற்றிலிருந்து குட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மக்கள் பாராட்டு
கிணற்றிலிருந்து யானை குட்டி வெளியேற ஏதுவாக, பள்ளம் தோண்டப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக வனக்குழுவினர் மற்றும் கூடலுார் வனக்கோட்ட வனக்குழுவினர் இணைந்து, கிணற்றில் இறங்கி குட்டியானையின் காலில் கயிறுகட்டி வெளியே இழுத்தனர். 10 மணி நேர போராட்டத்துக்கு பின், பகல், 12:30 மணிக்கு குட்டியானை மீட்கப்பட்டது. வெளியே வந்த அந்த குட்டி யானையும் வனத்துறையினரை துரத்தியது.
ஒருவழியாக அந்த குட்டியானையை, அருகில் தேயிலை தோட்டத்திற்குள் நின்றிருந்த தாய் யானையுடன் சேர்த்தனர்.
மீட்பு பணியில் ஈடுபட்ட, உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர்கள் அய்யனார், ரவி, சஞ்சீவி, வீரமணி ஆகியோர் தலைமையிலான வன குழுவினருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.