விபத்தில் சிக்கி எலும்பு முறிந்த மாணவர் ஆம்புலன்ஸ் உதவியுடன் தேர்வு எழுதினார்
விபத்தில் சிக்கி எலும்பு முறிந்த மாணவர் ஆம்புலன்ஸ் உதவியுடன் தேர்வு எழுதினார்
ADDED : ஏப் 09, 2024 04:41 AM

செஞ்சி: பொதுத்தேர்வு எழுதச் சென்றபோது, விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவோடு ஆம்புலன்சில் வந்து மாணவர் தேர்வு எழுதினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அஜய்குமார்,15; தையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது.
இந்த தேர்வை எழுத காலை 8:30 மணிக்கு அஜய்குமார் வீட்டில் இருந்து நண்பர்களுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்றார். அப்போது எதிரே வந்த பைக் மோதியதில், அஜய்குமாரின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு காலில் காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
காயத்தின் மீது 7 தையல் போடப்பட்டு, கால் முறிவுக்கு தற்காலிகமாக கட்டு போட்டனர். தேர்வு முடிந்த பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வருமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
அதற்குள் தேர்வுக்கு நேரம் நெருங்கியதால், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சலீம் மற்றும் பசுபதி ஆகியோர் மாணவரை ஆம்புலன்சில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர் அஜய்குமார் தேர்வு எழுத தேவையான வசதிகளை ஆசிரியர்கள் செய்து கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அஜய்குமார் சமூக அறிவியல் தேர்வை எழுதினார்.
விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவரை குறித்த நேரத்திற்கு மருத்துமனைக்கு அழைத்து சென்றதுடன், அவர் தேர்வு எழுதவும் உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்களை பொது மக்கள் பாராட்டினர்.

