ஹிந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு தலைமறைவு குற்றவாளி கேரளாவில் கைது
ஹிந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு தலைமறைவு குற்றவாளி கேரளாவில் கைது
ADDED : பிப் 25, 2025 11:23 PM

சென்னை:ஹிந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில், ஜாமினில் வந்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த நபரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 47. திருவள்ளூர் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர். கடந்த 2014ல் சி.டி.எச்., சாலையில் மர்ம நபர்கள் இவரை, வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த வழக்கில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட, வாணியம்பாடியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், 52, என்பவர், ஜாமினில் வெளியே வந்தார்.
ஆனால், 2023ல் இருந்து இவ்வழக்கின் விசாரணைக்காக, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, கடந்தாண்டு மார்ச் மாதம் அப்துல் ஹக்கீமுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், தனிப்படை போலீசார் தேடினர்.
இந்த நிலையில், அவர், கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், குட்டிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்று, அப்துல் ஹக்கீமை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.
பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்டார்.