சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தகவல்
சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தகவல்
ADDED : மே 08, 2024 12:14 AM
சென்னை:'சிறை காவலர்களால் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கூறியுள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பற்றி தரக்குறைவாக பேசி, அவதுாறு பரப்பியதால், பிரபல,'யு டியூபர்' சவுக்கு சங்கர் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்து உள்ளனர்.
'சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது' என, அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
அதை மறுத்துள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், 'சிறையில் அவரை யாரும் தாக்கவில்லை' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், 'கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என, நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
பத்திரிகை சுதந்திரம் என, மூச்சுக்கு முந்நுாறு தடவை வாய்சவடால் விடும் தி.மு.க., அரசில், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல தி.மு.க.,வினர் மீது, அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும், நீதியும், அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.
சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பதை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகி விடும்.
எனவே, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று, நீதிபதி ஒருவர் வழியாக விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

