தரங்கம்பாடி உரிமையை தங்கத்தில் எழுதி தந்த நாயக்கர் கல்வெட்டு ஆய்வாளர் தகவல்
தரங்கம்பாடி உரிமையை தங்கத்தில் எழுதி தந்த நாயக்கர் கல்வெட்டு ஆய்வாளர் தகவல்
ADDED : ஏப் 20, 2024 07:02 PM
சென்னை:சென்னை பெரம்பூரில் உள்ள சி.டி.டி.இ., மகளிர் கல்லுாரியில், தமிழ் துறை மற்றும் திருவாரூர் மத்திய பல்கலை, சமுதாய கல்லுாரிகளின் சார்பில், 'செப்பேடுகள் உணர்த்தும் தமிழக வரலாறும், பண்பாடும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில், மத்திய பல்கலையின் துணைவேந்தர் கிருஷ்ணன், கருத்தரங்க நுாலை வெளியிட்டார். கல்லுாரி தாளாளர் இல.பழமலை, 76 ஆய்வாளர்கள் வாசித்த கட்டுரைகள் பற்றி பேசினார்.
செப்பேடுகள் குறித்து, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட செப்பேடுகள் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை, வரலாற்றுக்கான முக்கிய சான்றுகளாக உள்ளன; அரசு, மடங்கள், தனியாரால் ஆவணமாக எழுதி வழங்கப்பட்டு உள்ளன. அரசு ஆவணங்களில் அரச முத்திரை பதிக்கப்பட்டுஇருக்கும்.
சிலர், தற்பெருமைக்காக தாங்களே போலி செப்பேட்டை உருவாக்கியதும் தெரிகிறது. கோவில் திருப்பணியின் போது, எசாலம், திருஇந்தளூர், திருத்தணி உள்ளிட்ட முக்கிய செப்பேடுகள் கிடைத்தன.
தமிழகத்தில் கிடைத்த சமஸ்கிருதம் கலந்த செப்பேடுகளை தமிழாக்கி, 10 நுால்களாக தமிழக தொல்லியல் துறை வெளியிட்டு உள்ளது.
செம்பாலானது தவிர, அரிதாக வெள்ளியிலும், தங்கத்திலும் கூட ஆவணங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படி தான், தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கர், டென்மார்க் அரசுக்கு எழுதித் தந்த தங்கச் செப்பேடு, டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் அருங் காட்சியகத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அட்மிரல் ஓவ்கிட், தஞ்சாவூரின் தரங்கம்பாடியை தலைநகராக்கி, அங்கு கோட்டை, சர்ச் உள்ளிட்டவற்றை கட்டிக் கொள்ளவும், மிளகு, பருத்தி உள்ளிட்ட முக்கிய பொருட்களை ஏற்றுமதி செய்யவும் ரகுநாத நாயக்கரிடம் உரிமை பெற்றுள்ளார்.
கடந்த, 1620, ஏப்., 16ம் தேதி இதற்கான ஒப்பந்தம் தமிழில் எழுதப்பட்டு, நாயக்கரின் தெலுங்கு கையெழுத்து மற்றும், ரோலன்ட் கிரேட் என்ற டென்மார்க் அதிகாரியின் கையெழுத்துடன் அந்த ஏடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போர்ச்சுகீசியர் அங்கு வணிகம் செய்தால் அபராதம் விதிக்கும் உரிமையும் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், சி.டி.டி.இ., கல்லுாரி முதல்வர் ஸ்ரீதேவி, கருத்தரங்க மலர் ஆசிரியர் ரவி, தமிழ் துறை தலைவர் வள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

