பழநி கிரி வீதியை சுற்றிலும் அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை * உயர்நீதிமன்றத்தில் தகவல்
பழநி கிரி வீதியை சுற்றிலும் அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை * உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஆக 28, 2024 07:59 PM
மதுரை:'திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதியை சுற்றிலும் 360 அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்திற்குப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நகராட்சி தரப்பு தெரிவித்தது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே நீதிபதிகள் அமர்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவ்வப்போது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
பழநி நகராட்சி தரப்பு: கிரி வீதியை நோக்கிச் செல்லும் சன்னதி வீதி, திருஆவினன்குடி கோயில் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கிரி வீதியைச் சுற்றிலும் 360 அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்திற்குப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: கிரி வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக்குழு மற்றும் கலெக்டர் ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.