ரூ.55 லட்சத்துக்கு பினாயில் வாங்கிய விவகாரம்; பொறுப்பு சுகாதார அலுவலர் மீது நடவடிக்கை
ரூ.55 லட்சத்துக்கு பினாயில் வாங்கிய விவகாரம்; பொறுப்பு சுகாதார அலுவலர் மீது நடவடிக்கை
UPDATED : ஜூலை 16, 2024 08:41 AM
ADDED : ஜூலை 16, 2024 02:21 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 55 லட்சம் பினாயில் வாங்கியதாக எழுந்த விவகாரத்தில் பொறுப்பு சுகாதார அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கமிஷனர் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இம்மாநகராட்சி கூட்டம் துணை மேயர் ராஜு தலைமையில் நேற்று நடந்தது. தி.மு.க.,மேயர் சரவணன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் கூட்டம் இது. அவர் கவுன்சிலராக தொடர்கிறார். இருப்பினும் நேற்று கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. 45க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ஜூன் 28 ல் ஒத்திவைக்கப்பட்ட 130 தீர்மானங்கள், கூடுதலாக நேற்று 63 தீர்மானங்கள் உட்பட 193 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டன. இதில் 192 தீர்மானங்கள் மாநகராட்சி உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப்பிறகு மாநகராட்சி கூட்டம் நடந்த நிலையில் உட்கட்சி பூசல் ஏதுமின்றி முடிந்தது.
மாடுகளை சாலைகளில் விடுவோருக்கு முதல்முறையாக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை ரூ. 10 ஆயிரம் அபராதமும், தொடர்ந்து அதே நிலை நீடித்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என கமிஷனர் தாக்கரே தெரிவித்தார்.
ரூ. 14 லட்சம் மதிப்பில் பினாயில் வாங்க கடிதம் அனுப்பிய நிலையில் ரூ. 55 லட்சத்திற்கு பில் வந்ததால் சுகாதார அலுவலர் சரோஜா அதற்கு காசோலை தர மறுத்தார். இது குறித்து மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் கவுன்சிலர் ரம்ஜான் அலி பேசுகையில், ''கமிஷனர் அனுமதியின்றி ரூ.55 லட்சத்துக்கு பினாயில் வாங்கப்பட்டுள்ளது. மாமன்றத்தின் அனுமதியும் பெறவில்லை. சுகாதார குழுவிடமும் அனுமதி பெறவில்லை. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது. அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என கேள்வி எழுப்பினார்.
கமிஷனர் தாக்கரே பதிலளிக்கையில், ''மாமன்றத்தில் இதற்கான தீர்மானம் வைக்கப்படாத நிலையில் கமிஷனரின் அதிகாரத்தின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த விலையில் பினாயில் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தவறு ஏதும் நடக்கவில்லை. கமிஷனர் மூலம் கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் சுகாதாரத் துறை நேரடியாக இதற்கான கொள்முதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சுகாதார அலுவலரிடம் (பொறுப்பு) விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 17 ஏ குற்றச்சாட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

