ADDED : செப் 11, 2024 11:34 PM
சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் -- 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., குரூப்- - 4 தேர்வை, கடந்த மாதம் 9ம் தேதி நடத்தியது. இது, 108 வி.ஏ.ஓ., 2,604 இளநிலை உதவியாளர் உட்பட, 6,244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடந்தது. இந்த தேர்வை, 15 லட்சத்து, 88,684 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 128 இளநிலை உதவியாளர், 70 வன பாதுகாவலர், 47 பில் கலெக்டர், 194 உதவி விற்பனையாளர்கள் உட்பட, 480 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த தேர்வு வாயிலாக, 6,724 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, இதன் எண்ணிக்கை கூடவோ, குறையவோ வாய்ப்புள்ளதாகவும், டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.