அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டில் அ.தி.மு.க.,வுக்கும் பங்கு: பழனிசாமி
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டில் அ.தி.மு.க.,வுக்கும் பங்கு: பழனிசாமி
ADDED : ஆக 03, 2024 09:12 PM

சென்னை:'அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தி.மு.க., அரசுக்கு கிடைத்த வெற்றி' என, முதல்வர் கூறியுள்ள நிலையில், 'இவ்வழக்கில் அ.தி.மு.க., எடுத்த முயற்சிகள், சட்ட முன்னெடுப்புகள், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பை பெற்று தந்த இயக்கம் அ.தி.மு.க.,தான். இடஒதுக்கீடு கொள்கையை, தமிழகத்தில் 100 சதவீதம் அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும், இன்று வரை பயனடைந்து வருகின்றனர். இதற்கு அ.தி.மு.க.,தான் முக்கிய காரணம்.
தமிழகத்தின் இடஒதுக்கீட்டு வரலாற்றில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்கள் பொன்னெழுத்துக்களால் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழக அரசு 2009ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான, 18 சதவீத இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு மூன்று சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது.
ஆனால், அருந்ததியர் மக்களை வஞ்சிக்கிற வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், உள் ஒதுக்கீட்டை பறிக்கும் வகையில், தி.மு.க., ஆட்சியில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. என் தலைமையிலான அரசு, அருந்ததியர் மக்களுக்கான உள் ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2020 பிப்ரவரி மாதம், ஆதிதிராவிடர் நலச் செயலர் தலைமையில் கமிட்டி அமைத்தது. அதன் பரிந்துரைகளின்படி, அரசு சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு, திறம்பட கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அதன் அடிப்படையில், 2020 ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான, ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்கு, சாதகமான இடைக்கால தீர்ப்பை வழங்கியது.
பின், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு உள் இடஒதுக்கீடு செல்லும் என, தீர்ப்பு வழங்கி உள்ளது.
இவ்வழக்கில், அ.தி.மு.க., எடுத்த முயற்சிகள், சட்ட முன்னெடுப்புகள், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.