திருச்செந்துார் நகராட்சியில் நிதி முறைகேடு அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு, தர்ணா
திருச்செந்துார் நகராட்சியில் நிதி முறைகேடு அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு, தர்ணா
ADDED : ஆக 30, 2024 03:09 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் நாகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. தலைவராக தி.மு.க., வை சேர்ந்த சிவஆனந்தியும், துணைத் தலைவராக செங்குழி ரமேஷ் என்பவரும் உள்ளனர். இந்நிலையில், நேற்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட 17 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் வேலம்மாள் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, வெளிநடப்பு செய்த அவர், நகராரட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது கணவரும், அ.தி.மு.க., நகர பொருளாளருமான வள்ளிராஜியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து, கவுன்சிலர் வேலம்மாள், அவரது கணவர் வள்ளிராஜ் ஆகியோர் கூறியதாவது:
நகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டும் எந்தவித வசதியும் இல்லாத லாட்ஜ்களுக்கு அப்ரூவல் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, தலைவர், துணைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளோம். வைகாசி விசாக நிகழ்ச்சிக்கு தண்ணீர் பந்தல் அமைத்தல் தொடர்பாக ஒரு லட்சத்து 28000 ரூபாய் செலவானதாக கூறியுள்ளனர். ஆனால், 20000 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
தரம் இல்லாத மின்விளக்கு அமைத்தல், நோட்டு, புத்தகம் வாங்கியது என எதற்கெடுத்தாலும் விதிமுறையை மீறி பணம் எடுக்கப்பட்டு முறைகேடு நடந்து வருகிறது. 17 வது வார்டில் எந்தவித அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. குடிநீர் குழாயை மாற்றி அமைக்க நிதி இல்லை என கூறுகின்றனர்.
நகராட்சியில் நடந்து வரும் முறைகேட்டை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன். அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

