கள்ளச்சாராய பலிக்கு சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., உண்ணாவிரதம்
கள்ளச்சாராய பலிக்கு சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 28, 2024 02:59 AM

சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வலியுறுத்தியும், இப்பிரச்னையை சட்டசபையில் பேச அனுமதிக்காத தி.மு.க., அரசை கண்டித்தும், சென்னையில் நேற்று அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடந்த, உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். காலை 9:00 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை, மாலை 5:00 மணி அளவில், பழனிசாமிக்கு பழரசம் கொடுத்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முடித்து வைத்தார்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அனைவரும், தி.மு.க., அரசை விமர்சித்து பேசினர். தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
உண்ணாவிரதம் முடிந்த பின், பழனிசாமி அளித்த பேட்டி:
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் பார்க்க சென்றால், மக்கள் கேள்வி கேட்பர் என்பதால், முதல்வர் கள்ளக்குறிச்சி செல்லவில்லை.
இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரித்தால் உண்மை வெளிவராது. ஏனெனில், அதில் மாநில அரசுக்கு உட்பட்டவர்கள் தான் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில், தி.மு.க.,வை சேர்ந்த பெரும்புள்ளிகள் பின்னணியில் இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறோம். அதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 63 பேர் இறந்துள்ளனர்; பலருக்கு கண் பார்வை போய் விட்டது.
இதுகுறித்து, சட்டசபையில் பேச வாய்ப்பு தரவில்லை. தி.மு.க., ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை. சட்டசபையில் சுதந்திரமாக பேச முடியவில்லை.
அரசை குறை கூறினால் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க விடாமல் நீக்குகின்றனர். அமைச்சர்களை விட சபாநாயகர் அதிகமாக பேசுகிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக, ஏற்கனவே முடிவு எடுத்து விட்டோம். கள்ளச்சாராய சம்பவம் குறித்து கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.
அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து, நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்யப்படும். தமிழகமே பதறிய சூழலிலும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் குரல் தராதது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில். தி.மு.க., உடந்தையோடு சாராய வியாபாரம் நடப்பதாக, அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர்.
இத்தனை பெரிய விஷயத்தை சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்றால், பேச விடாமல், தி.மு.க., தடுக்கிறது. பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும் என ராகுல் கூறியதும், தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆராவாரம் செய்தனர். இங்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவதை தடுக்கின்றனர். டில்லிக்கு ஒரு நீதி; தமிழகத்தில் வேறொரு நீதியா
இவ்வாறு அவர் கூறினார்.

