ADDED : ஜூலை 20, 2024 02:51 AM
சென்னை : தென்மேற்கு பருவமழை கேரளாவில் மிகத் தீவிரமாக உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 5 நாட்களாக தொடர்ச்சியாக மிக கனமழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கனமழை தொடர்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று நண்பகல் வரையில் அதிகன மழையும், கோவை மாவட்டத்தில் மிக கனமழையும் பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று நண்பகல் வரை கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சியில், 22 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மத்திய மேற்கு, ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை ஒடிசா கடற்கரையில், புரிக்கு அருகில் கரையை கடக்கும். இந்த பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை சூறாவளிக் காற்று வீசுகிறது.
எனவே, மீனவர்கள், வங்கக் கடலின் வடக்கு, மத்திய மேற்கு, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு, வரும் 23ம் தேதி வரை செல்ல வேண்டாம்.
அரபிக் கடலில், மத்திய மற்றும் அதனையொட்டிய தெற்கு அரபிக் கடல் பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதால், இந்த பகுதிகளுக்கும், 23ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, கடலுார், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

