ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்து கட்சி கூட்டம் * அன்புமணி வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அனைத்து கட்சி கூட்டம் * அன்புமணி வலியுறுத்தல்
ADDED : பிப் 26, 2025 06:06 PM
சென்னை:'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் அனைவருக்கும் முழுமையான சமூக நீதி வழங்குவதற்காக, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை, மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும், அதை கண்டும் காணாமலும், தி.மு.க., அரசு நாடகமாடி கொண்டிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு, அந்த மாநில மக்களின் உணர்வுகளையும், விருப்பங்களையும் அறிந்து, அவற்றை செயல்படுத்த வேண்டும் என்ற கடமையும், பொறுப்பும் உண்டு. ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மட்டும் ஆளும் தி.மு.க., அதன் குறுகிய அரசியல் லாபங்களுக்காக, மக்களின் உணர்வுகளை மதிக்க மறுக்கிறது. இதனால், தமிழகத்தில் சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை, தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, தமிழக அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்னையில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தி.மு.க., அரசு செயல்பட முடியாது. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

