ADDED : மார் 04, 2025 06:55 PM
சென்னை:தலைமைச் செயலகத்தில், இன்று நடக்க உள்ள, அனைத்து கட்சி கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும், லோக்சபா தொகுதிகள், அடுத்த ஆண்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில், இப்பணிகள் நடந்தால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், எட்டு தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது என, முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறையின்போது, தமிழகத்தில் உள்ள தொகுதிகள் எண்ணிக்கையில், பாதிப்பு ஏற்படக்கூடாது என, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில், இன்று தலைமைச் செயலகத்தில், அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க உள்ளது. தமிழகத்தில் இருந்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள, 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக, அ.தி.மு.க., அறிவித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அறிவித்து உள்ளனர். இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கட்சியான, தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்க முடிவு செய்துள்ளது. அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.