அமைச்சர்களை 'டிஸ்மிஸ்' செய்ங்க அன்புமணி வலியுறுத்தல்
அமைச்சர்களை 'டிஸ்மிஸ்' செய்ங்க அன்புமணி வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2025 09:02 PM
சென்னை:'டாஸ்மாக் ஊழலுக்கு காரணமான, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி ஆகியோரை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதை விட பல நூறு மடங்கு ஊழல்களும், முறைகேடுகளும், இத்துறையில் நடந்திருக்கின்றன.
அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கூறி, இந்த ஊழலை தி.மு.க., அரசு கடந்து விட முடியாது. மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை, பலமுறை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். டாஸ்மாக் ஊழல்கள் எதுவும், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல், நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஊழல்களுக்கு அவரது ஆசி இருந்ததாகவே தோன்றுகிறது.
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில், அவர் மீண்டும் அதே துறையின் அமைச்சராக்கப்பட்டார். இதிலிருந்து டாஸ்மாக் ஊழலை, முதல்வர் ஆதரித்ததாகவே கருத வேண்டியுள்ளது.
டாஸ்மாக் ஊழலுக்கு காரணமான, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி ஆகியோரை, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக, பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு, தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.