விழுப்புரத்தில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த பழங்கால ஈமத்தாழிகள்
விழுப்புரத்தில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த பழங்கால ஈமத்தாழிகள்
ADDED : ஆக 26, 2024 04:26 AM

சென்னை: விழுப்புரம் மாவட்டம் அரசூரில், பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, அதிகஅளவில் பழங்கால ஈமத்தாழிகள் வெளிப்பட்டுள்ளன.
விழுப்புரம் - உளுந்துார்பேட்டை சாலையில், 16வது கிலோ மீட்டரில், தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் உள்ளது அரசூர். இங்கு பாலம் அமைக்கும் பணிக்காக, பொக்லைன் இயந்திரத்தின் வாயிலாக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியின் போது, பெரியதும், சிறியதுமாக பானைகள் இருப்பதும், இந்த பணியால், அவை உடைவதையும் அறிந்த, அந்த ஊரை சேர்ந்த மின்வாரிய ஊழியரான சசிகுமார், வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தினருக்கு தகவல் அளித்தார்.
அச்சங்கத்தின் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களான மணியன் கலியமூர்த்தி, மதுரைவீரன், விழுப்புரம் வீரராகவன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, மணியன் கலியமூர்த்தி கூறியதாவது:
பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில், தரைமட்டத்தில் இருந்து, 1 மீட்டர் ஆழத்தில் சிறியதும், பெரியதுமாக, 10க்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் உள்ளதை அறிய முடிகிறது.
பெரிய தாழிகள், 3 அடி உயரத்துடன் உள்ளன. இவற்றின் ஓடுகள், 2 செ.மீ., தடிமன் உள்ளதாகவும், கருப்பு - சிவப்பு, கருப்பு, சிவப்பு நிறங்களிலும் உள்ளன.
இப்படிப்பட்ட வண்ண பானைகள் வனையும் முறை, 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. அதனால், இந்த பகுதியில், இறந்த மனிதர்களை ஈமத்தாழிகளில் வைத்து, புதைத்திருக்கலாம். சடங்குகளுக்கான சிறுபானைகளையும், அவற்றில் வைத்து புதைத்திருக்கலாம். தற்போது, அவை உடைந்த நிலையில் உள்ளன.
இப்பகுதியின் அருகிலேயே, 100 நாள் வேலை திட்டத்தின் குளம் வெட்டும் பணியும் நடக்கிறது. தற்போது அங்கு, 2 அடி ஆழக்குழி வெட்டப்பட்டுள்ளது. அப்பகுதியிலும், இனி ஈமத்தாழிகள் வெளிப்படலாம்.
அதனால், தொல்லியல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து, தொல்பொருட்களை கைப்பற்றினால், முக்கிய ஆவணங்களாகும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

