பயிற்சி முடித்தும் பணியில்லை: அங்கன்வாடி ஊழியர்கள் அதிருப்தி
பயிற்சி முடித்தும் பணியில்லை: அங்கன்வாடி ஊழியர்கள் அதிருப்தி
ADDED : பிப் 10, 2025 05:20 AM
சென்னை : பொது சுகாதார துறையின் கீழ், இரண்டாண்டு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற 1,800 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் பணி வழங்காததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் கூறியதாவது: ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி ஊழியர்களாக பணிபுரிகிறோம். குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு குடற்புழு நீக்கம், கர்ப்பிணியரின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது என, சுகாதார துறை சார்ந்த பணிகளையும் செய்து வருகிறோம்.
அதனால், தமிழக அரசின் பொது சுகாதார துறையின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 11 மையங்களில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரண்டாண்டு கிராம சுகாதார செவிலியர் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், கிராம சுகாதார செவிலியராக பணி நியமனம் செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், 2019 முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி பெற்ற 1,800 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, இன்னும் கிராம சுகாதார செவிலியராக பணி நியமனம் வழங்கப்படவில்லை.
இதுபற்றி, பொது சுகாதார துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், டிப்ளமோ உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்கள், மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர்' என்றனர்.
இதை, பயிற்சி பெறுவதற்கு முன் கூறாமல், பயிற்சியை நிறைவு செய்த பிறகு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், 1,800 ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டு அங்கன்வாடி ஊதியம் நிறுத்தப்பட்டதோடு, அனுபவமும் தடைபட்டு விட்டது. பயிற்சியை நிறைவு செய்து, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நியமனம் வழங்காதது, வேதனையாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்படாததால், 3,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்த அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.