ADDED : ஜூலை 02, 2024 04:19 AM

மேட்டுப்பாளையம்,: 'மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவரில், இந்திய இறையாண்மைக்கு எதிராக வாசகம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் பா.ஜ., புகார் அளித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் -- கோத்தகிரி சாலையில், பொதுமக்கள் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று காலை நடை பயிற்சியில் சிலர் ஈடுபட்ட போது, கோத்தகிரி சாலையில் மலைப்பகுதி துவங்கிய சிறிது துாரத்தில், சாலை ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில், 'இந்தியா ஒழிக' என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது.
அதன் அருகே உள்ள தடுப்புச் சுவர்களில், நீட் தேர்வை புறக்கணிக்க வேண்டும் என, கருப்பு மையால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்து. நடை பயிற்சியில் ஈடுபட்டவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த சசிகுமார், மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால், மாலை, 5:00 மணி வரை வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த வாசகத்தை போலீசார் உடனடியாக ஆட்களை வைத்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.