விக்கிரவாண்டி தேர்தலில் களமிறங்க பா.ம.க., முடிவு: பலத்தை காட்ட தயாராகிறது
விக்கிரவாண்டி தேர்தலில் களமிறங்க பா.ம.க., முடிவு: பலத்தை காட்ட தயாராகிறது
ADDED : ஜூன் 14, 2024 03:55 AM

சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், குறைந்தது 50,000 ஓட்டுகளை பெற்று பலத்தைக் காட்ட பா.ம.க., திட்டமிட்டுள்ளது.
தி.மு.க., - எம்.எல்.ஏ., மறைவால் காலியான விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., சார்பில், அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணி செயலர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பா.ம.க., தலைவர் அன்புமணி, சட்டசபை பா.ம.க., குழு தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த அன்புமணி, 'விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் விவாதித்தோம். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசிவிட்டு பா.ம.க.,வின் முடிவை அறிவிப்போம்' என்றார்.
விக்கிரவாண்டியில், பா.ம.க.,வுக்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டு வங்கி உள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., விக்கிரவாண்டியில் 23.19 சதவீதம், அதாவது 41,428 ஓட்டுகளை பெற்றது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டியில், பா.ம.க., 32,198 ஓட்டுகளை பெற்றுள்ளது. 2009 லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த பா.ம.க., 2010ல் நடந்த பென்னாகரம் சட்ட சபை தொகுதி இடைத்தேர்தலில், 41,285 ஓட்டுகளை பெற்று, அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதனால் தான், 2011 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க.,வுடன் பா.ம.க., கூட்டணி அமைக்க முடிந்தது.
லோக்சபா தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சியில் பா.ம.க.,வின் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு சென்றுள்ளன. அதனால் தான் கள்ளக்குறிச்சியில், நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த நான்காவது இடத்திற்கு பா.ம.க., தள்ளப்பட்டது.
இந்த பின்னடைவை சரி செய்ய, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் குறைந்தது 50,000 ஓட்டுகளை பெற வேண்டும். அ.தி.மு.க.,வை விட அதிகமாக பெற வேண்டும் என, ராமதாசிடம் பா.ம.க., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, விக்கிரவாண்டியில் பா.ம.க., போட்டியிடுவது உறுதி என்றும், அன்புமணி, அண்ணாமலை சந்திப்புக்குப் பின் அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

