அரபிக் கல்லுாரி பேராசிரியர் மாணவர்கள் வங்கி கணக்கு ஆய்வு
அரபிக் கல்லுாரி பேராசிரியர் மாணவர்கள் வங்கி கணக்கு ஆய்வு
UPDATED : மார் 22, 2024 12:54 PM
ADDED : மார் 22, 2024 12:54 AM
சென்னை:ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைதான, அரபிக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவர்களின் சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் சையது அப்துர் ரஹ்மான் உமரி, 52.
இவர், அரபிக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர். கோவை குனியமுத்துாரைச் சேர்ந்தவர் இர்ஷாத், 32; கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹுசைன், 38; சென்னை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜமீல் பாஷா உமரி, 55. இவர்கள் அரபிக் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள்.
நால்வரும் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கு அரபிக் கல்லுாரியில் பயங்கரவாதம் குறித்த பயிற்சியும் அளித்துள்ளனர். இவர்கள், கடந்தாண்டு அக்., 23ல், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கார் குண்டு வெடிப்பு நடத்தி பலியான ஜமேஷா முபினின் நெருங்கிய கூட்டாளிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
இவர்களின் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி, அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். வங்கிக் கணக்கை ஆய்வு செய்த போது, நால்வரும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி விசாரணை துவங்கியுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நால்வரின் வங்கிக் கணக்கு விபரங்களை ஆய்வு செய்ததில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது உறுதியாக உள்ளது.
'அதிலும், சையது அப்துர் ரஹ்மான், ஜமீல் பாஷா உமரி ஆகிய இருவருக்கான பணம் வரவில் அதிக சந்தேகம் உள்ளது. இது பற்றி தீவிர விசாரணை நடக்கிறது' என்றனர்.

