'மகளிர் பாதுகாப்பு திட்டங்களை எளிதில் பயன்படுத்த முடிகிறதா?'
'மகளிர் பாதுகாப்பு திட்டங்களை எளிதில் பயன்படுத்த முடிகிறதா?'
ADDED : ஜூலை 25, 2024 01:05 AM
சென்னை:'மகளிர் பாதுகாப்புக்கான திட்டங்களை, அவர்களால் எளிதில் பயன்படுத்த முடிகிறதா?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பஸ், ரயில் நிலையங்களில், போலீஸ் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலம் உருவாக்கவும், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக இரவு நேரங்களில் பஸ், ரயில் நிலையம் வரக்கூடிய மகளிருக்காக, தங்கும் விடுதிகளை அமைக்கவும் உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''பாதுகாப்பாக மகளிர் தங்கும் வகையில், சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 நகரங்களில் தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
''நெருக்கடிக்கு, பாலியல் கொடுமைக்கு ஆளாகும் மகளிர், அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்தால், உரிய உதவி, பாதுகாப்பு வழங்கப்படும். அவசர எண்ணுக்கு இதுவரை ஒன்பது லட்சம் பேர் அழைத்துள்ளனர். அதில், ஒரு லட்சம் பேருக்கு பாதுகாப்பு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
அப்போது, மனுதாரர் தரப்பில், 'மகளிருக்கு இந்த விபரங்கள் முழுமையாக தெரியவில்லை; அரசு தரப்பில் முறையாக விளம்பரப்படுத்தவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மகளிர் பாதுகாப்புக்கான திட்டங்களை, அவர்களால் எளிதில் பயன்படுத்த முடிகிறதா என்பது குறித்து மருத்துவமனை, தங்கும் இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.