ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆந்திரா போலீசை கண்டு ரவுடி தப்பியோட்டம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆந்திரா போலீசை கண்டு ரவுடி தப்பியோட்டம்
ADDED : ஜூலை 24, 2024 06:43 PM

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ரவுடி சீசிங்ராஜா ஆந்திராவில் போலீசை கண்டதும் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 16 பேர்களில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஆற்காடு சுரேஷ் என்பவரின் காதலியான அஞ்சலை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரவுடி சீசிங்ராஜா என்பவருக்கும் இக்கொலை சம்பவத்தில் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தனிப்படையினர் ரவுடி சீசிங் ராஜாவை பிடிப்பதற்காக ஆந்திராவிற்கு விரைந்தனர்.ஆந்திராவில் 2 வது மனைவியுடன் தங்கியிருந்த சீசிங்ராஜா ஆந்திர மாநில போலீசாரை கண்டதும் காரில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

