ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
UPDATED : ஜூலை 15, 2024 12:28 PM
ADDED : ஜூலை 14, 2024 11:54 PM

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, காவல் விசாரணையில் இருந்த ரவுடி திருவேங்கடம், நேற்று அதிகாலை போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், 52. சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல வந்தவர்கள், அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.
இச்சம்பவம் இம்மாதம் 5ம் தேதி மாலை 7:00 மணியளவில் நடந்தது. செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
11 பேர் கைது
பின், அண்ணாநகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைய முயன்ற, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை கிராமத்தைச் சேர்ந்த பாலு, 39; சென்னை குன்றத்துார் திருவேங்கடம், 33, உட்பட 11 பேரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், கைதான பொன்னை பாலு, கடந்தாண்டு ஆக., 18ல், சென்னை பட்டினப்பாக்கத்தில் கொல்லப்பட்ட, கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி என்றும், மற்றவர்கள் அவரது கூட்டாளிகள் என்பதும் தெரியவந்தது.
ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாகவே, அவரின் பிறந்த நாளன்று ஆம்ஸ்ட்ராங் தீர்த்து கட்டப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரும், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பின், அவர்களை சென்னை எழும்பூர் நீதிமன்ற அனுமதி பெற்று, ஐந்து நாள் காவலில் எடுத்து, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் தனித்தனியாகவும், கூட்டாகவும் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தின் போது பயன்படுத்த வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி உள்ளிட்டவற்றை, மாதவரம் பகுதியில் ரெட்டேரி அருகே பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த இடத்தை அடையாளம் காட்டுமாறு அவரை போலீசார் நேற்று அதிகாலையில் அழைத்துச் சென்றனர்.
சுட முயன்றார்
ரெட்டேரி அருகே ஆட்டுச் சந்தை கூடும் இடத்திற்கு சென்ற போது, போலீசாரின் பிடியில் இருந்து திருவேங்கடம் தப்பியுள்ளார். அந்த இடத்தை சுற்றிலும் போலீசார் தேடினர்.
மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில், வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் உள்ள தகர கொட்டகைக்குள் திருவேங்கடம் பதுங்கியிருப்பதை கண்டறிந்தனர்.
அவரை கைது செய்ய முயன்ற போது, போலீசாரை நோக்கி திருவேங்கடம் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார்.
போலீசார் பலமுறை எச்சரித்தும் பயனளிக்காத நிலையில், தற்காப்புக்காக அதிகாலை 5:30 மணியளவில், தண்டையார்பேட்டை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புஹாரி, துப்பாக்கியால் திருப்பி சுட்டதில், திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடதுபக்க மார்பில் குண்டு பாய்ந்து சரிந்தார்.
உடனடியாக, மாதவரம் அருகே உள்ள மெரிடியன் என்ற தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, திருவேங்கடம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தில், போலீசார் யாருக்கும் காயமில்லை. திருவேங்கடம் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். என்கவுன்டர் தொடர்பாக புழல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை, மாஜிஸ்திரேட் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணை
'தகுந்த பாதுகாப்புடன், அரசு வாகனத்தில் திருவேங்கடம் அழைத்து செல்லப்பட்டார். இயற்கை உபாதைக்காக வாகனத்தை போலீசார் நிறுத்திய போது, பாதுகாப்பு பணியில் இருந்த தனிப்படை போலீசாரை தள்ளி விட்டு, அவர் தப்பிவிட்டார். அவரை பிடிக்க முயன்ற போது, தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ததில், திருவேங்கடம் பலியாகி விட்டார்' என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காவலில் இருந்த குற்றவாளி தப்பிச் செல்லும் அளவுக்கு போலீசார் அலட்சியமாக இருந்தது ஏன் என்பது குறித்தும், என்கவுன்டர் செய்யப்பட்ட விதம் குறித்தும், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் விசாரித்து வருகிறார்.

