393 நாட்களாக அசோக்; 31 நாட்களாக விஜயபாஸ்கர் தலைமறைவு போலீசாருடன் கண்ணாமூச்சி ஆடும் அரசியல்வாதிகள்
393 நாட்களாக அசோக்; 31 நாட்களாக விஜயபாஸ்கர் தலைமறைவு போலீசாருடன் கண்ணாமூச்சி ஆடும் அரசியல்வாதிகள்
ADDED : ஜூலை 11, 2024 10:45 PM
கரூர்,:தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக், 393 நாட்களாகவும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 31 நாட்களாகவும் தலைமறைவாக உள்ளனர். கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் அரசியல்வாதிகளால், போலீஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, 2023 ஜூன் 14ல் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. 393 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடக் கூடாது என்பதற்காக, லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அமலாக்கத் துறையினரிடம் சிக்கவில்லை.
அவரை, கைது செய்ய தமிழக போலீசார் ஒத்துழைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.
கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து கிரையம் செய்து கொண்டதாக, யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். கரூர் குப்புச்சிபாளையம் பிரகாஷ், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தன் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்து விட்டதாகப் புகார் அளித்தார். இந்த இரு வழக்குகளையும், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை, கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜயபாஸ்கர் தலைமறைவாகி, 31 நாள் ஆகியும், இதுவரை கைது செய்யப்படவில்லை.
விஜயபாஸ்கரை தேடி வரும் போலீசார், அவர் தொடர்புடைய ஆதரவாளர்கள். உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை; விசாரணை என காய் நகர்த்துகின்றனர்.
அமலாக்கத்துறை மற்றும் போலீசாருக்கு கண்ணாமூச்சி ஆட்டம்காட்டி விட்டு தலைமறைவாக உள்ள அசோக், விஜயபாஸ்கர் ஆகியோரின் நடவடிக்கை, உயர் அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

