சட்டசபை கூட்டம் இன்று துவக்கம் பலத்தை காட்ட அ.தி.மு.க., முனைப்பு
சட்டசபை கூட்டம் இன்று துவக்கம் பலத்தை காட்ட அ.தி.மு.க., முனைப்பு
ADDED : ஜூன் 20, 2024 02:12 AM
சென்னை:லோக்சபா தேர்தலுக்குப் பின், தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை துவங்குகிறது. இக்கூட்டத் தொடரில், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, தங்கள் பலத்தைக் காட்ட அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முனைப்புடன் உள்ளன.
சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ல் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடத்தி முடிக்கப்பட்டு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், வரும் 24ம் தேதி கூட்டத் தொடர் துவங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
அதன்பின், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால், சட்டசபை கூட்டத் தொடரை இன்று ஆரம்பித்து, 29ம் தேதி முடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு சட்டசபை கூடுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளை, சபாநாயகர் வாசிப்பார். தொடர்ந்து, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவு தொடர்பாக இரங்கல் தீர்மானத்தை வாசிப்பார்.
அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதன்பின், சட்டசபை ஒத்தி வைக்கப்படும்.
நாளை காலை 10:00 மணிக்கு, வழக்கம்போல் சட்டசபை கூடும். நாளை முதல் 29ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலை சட்டசபை கூடும். நாளைய கூட்டத்தில், காலையில் நீர்வளத் துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும்.
மாலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும்.
நாளை மறுதினம் முதல், காலை 9:30 மணிக்கு சட்டசபையை கூட்ட, தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும். அதன்பின், தினமும் காலை 9:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இரண்டு அமர்வுகளாக சட்டசபை கூட்டம் நடக்கும்.
லோக்சபா தேர்தல் முடிவுகள், இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்த விவகாரம் சபையில் எதிரொலிக்கும்.
மேலும், காவிரி பிரச்னை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

