ADDED : மே 31, 2024 11:17 PM

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மணிக்கட்டியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவன், 35. இவரது மனைவி நந்தினி, 28. இவர்களுக்கு அபி, 6, தட்சன், 4, என இரு ஆண் குழந்தைகள் இருந்தனர்.
அவர்கள் வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக, நேற்று காலை, 10:30 மணிக்கு பார்த்தபோது, சிவனின் மனைவி மற்றும் குழந்தைகள் இறந்த நிலையில் இருந்தனர்.
இதையடுத்து காரிமங்கலம் போலீசார், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்தபோது, சிவன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.
அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிவனின் இரு குழந்தைகள் மற்றும் முகம் சிதைந்த நிலையில் அவரது மனைவி ஆகிய மூன்று பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் வீட்டை சோதனை செய்ததில், இரண்டு பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் அருகில் இருந்ததால், சிவன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து கொன்று விட்டு, தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிந்தது.
இது பற்றி போலீசார் கூறுகையில், 'இரு நாட்களுக்கு முன் பூச்சி மருந்து குடித்ததால் உடல்கள் சிதைந்துள்ளன. சிறிதளவு மருந்து குடித்ததால் சிவன் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என்றனர்.
பின்னர் அவர், சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

