'பேட் கேர்ள்' திரைப்பட விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்
'பேட் கேர்ள்' திரைப்பட விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்
ADDED : பிப் 28, 2025 02:00 AM
சென்னை:'பேட் கேர்ள்' படத்துக்கு தணிக்கை சான்று கோரி, இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை. விண்ணப்பங்கள் வந்தால், சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
காக்கா முட்டை, விசாரணை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் இயக்குனர் வெற்றி மாறன்.
இவரது 'கிராஸ் ரூட் பிலிம்' நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில், 'பேட் கேர்ள்' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தின் 'டீசர்' ஜன. மாதம் 26ல் வெளியானது. இதில் 'ஹிந்து மத கலாசாரத்தையும், குறிப்பாக பிராமண சமுதாயத்தின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில், காட்சிகள் இடம்பெற்றுள்ளது' எனக் கூறி, பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்க நிறுவனத் தலைவர் எஸ்.ராமநாத் என்பவர், 'பேட் கேர்ள்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்று அளிக்கக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'பட டீசரில் பிராமண பெண், நாகரீக கலாசாரத்துக்கு மாறும் வகையிலும், பிராமண சமுதாய பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பிராமண மக்களின் மனம், உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும். அதுவரை, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், 'பேட் கேர்ள்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்று அளிக்கக் கூடாது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம், ஜன. மாதம் 30ல் அளித்த புகார் மனு மீது, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மத்திய தணிக்கை வாரியம் தரப்பில், துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, பேட் கேர்ள் என்ற பெயரில் தணிக்கை சான்று கேட்டு, இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இருப்பினும், மனுதாரரின் கோரிக்கை மனு, சட்டப்படி பரிசீலிக்கப்படும் என்றார்.
மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் ஆஜராகி, குறிப்பிட்ட சமூகம் மற்றும் பெண்களை தவறாக சித்தரித்து காட்சிகள் உருவாக்கப்படுவது சட்டவிரோதமானது என்பதால், படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என்றார்.
தணிக்கை வாரியம் தரப்பு வாதத்தை ஏற்று, இந்த வழக்கை முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

