பெண் இன்ஸ்பெக்டருக்கு ஜாமின் மறுப்பு * விசாரணை ஜூன் 3 க்கு ஒத்திவைப்பு
பெண் இன்ஸ்பெக்டருக்கு ஜாமின் மறுப்பு * விசாரணை ஜூன் 3 க்கு ஒத்திவைப்பு
ADDED : மே 30, 2024 07:23 PM
மதுரை:கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 3க்கு ஒத்திவைத்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் மே 22ல் நடந்த மோதலில் ராமர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, அவர் மகன் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். ராமசாமியின் மற்றொரு மகன் ராம்குமாரை பெங்களூருவில் கைது செய்தனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராமநாதபுரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவையும் 42 கைது செய்தனர்.
முன்னதாக இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ராமர் தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் என் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இம்மனு நீதிபதி விக்டோரியாகவுரி முன் விசாரணைக்கு வந்தபோது சத்தியஷீலா தரப்பில் 'கொலை வழக்கில் மனுதாரர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால் அவரது முன்ஜாமின் மனுவை ஜாமின் மனுவாக கருதி விசாரிக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் 'மனுதாரருக்கு அவரது பிள்ளைகளை கல்லுாரியில் சேர்ப்பது தொடர்பான பணிகள் இருப்பதால் இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்' எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்க மறுத்து விசாரணையை ஜூன் 3க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.