தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.74 லட்சம் வசூலிக்க தடை
தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.74 லட்சம் வசூலிக்க தடை
ADDED : செப் 18, 2024 12:53 AM
சென்னை:அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியையிடம், 74 லட்சம் ரூபாய் சம்பளத் தொகையை வசூலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் தாக்கல் செய்த மனு:
கர்நாடக மாநிலம், மைசூரில், ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தேன். சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில் விண்ணப்பித்து, மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றேன்.
ஹரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக, இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன், பின், கிருஷ்ணகிரியில் உள்ள பாத்திமா துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டேன். 24 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன்.
கடந்த 2004ல் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும்படி, கல்வித்துறை கோரியது; அதன்படி சமர்ப்பித்தேன். இதுவரை சான்றிதழை திருப்பித் தரவில்லை. 2012ல் பள்ளி தாளாளரிடம் இருந்து எனக்கு 'நோட்டீஸ்' வந்தது.
நான் சமர்ப்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் பொய்யானது என்றும் சம்பளத்தை திருப்பி செலுத்தவும், அதில் கூறப்பட்டது. என்னை தற்காலிக பணி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்காலிக பணி நீக்க உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு 2012ல் ரத்து செய்தது. அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, என்னை மீண்டும் பணி அமர்த்தி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தணிக்கை அதிகாரியின் ஆட்சேபனையை சுட்டிக்காட்டி, சம்பளத்தை வசூலிப்பதற்கான உத்தரவை, கிருஷ்ணகிரியில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட்டில் பிறப்பித்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்து, அது நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுஉள்ளது. ஆனால், கடந்த நவம்பர் வரை, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை.
பள்ளியின் தாளாளரும் நோட்டீஸ் அனுப்பினார். எந்த விசாரணையும் இன்றி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு பிறப்பிக்க, வட்டார கல்வி அதிகாரிக்கு அதிகாரமில்லை.
எனவே, வட்டார கல்வி அதிகாரி உத்தரவு மற்றும் பள்ளி தாளாளர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும். தடையின்றி பணியில் தொடர, அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் காசிநாதபாரதி ஆஜராகி, ''24 ஆண்டுகளுக்கான சம்பளத் தொகையாக 74 லட்சம் ரூபாயை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர்.
''ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்,'' என்றார்.
இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க, கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆறு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். சம்பளத் தொகையை வசூலிக்கவும், நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.