ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை விளம்பரம் நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவு
ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை விளம்பரம் நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவு
UPDATED : ஜூலை 04, 2024 04:27 AM
ADDED : ஜூலை 03, 2024 10:43 PM

சென்னை:'ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவது தொடர்பாக, விளம்பரங்கள் வெளியிடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக, அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும், இந்திய பார் கவுன்சில், நான்கு வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.என்.விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
'பிளம்பர், கார்பென்டர், சோபா கிளீனிங்' உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, 'சுலேகா, குயிக்கர், ஜஸ்ட் டயல்' போன்ற ஆன்லைன் நிறுவனங்கள், பொது மக்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள், வழக்கறிஞர் சேவையையும் வழங்கி வருகின்றன.
இந்நிறுவனங்களின் செயலிகள், இணையதளங்களில், வணிக நோக்குடன் சட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைக்கு தடை விதித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது, இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடை
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்திய பார் கவுன்சில்விதிகள்படி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வழக்கறிஞர்கள் தங்களை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில், சட்டம் என்பது ஒரு உன்னதமான தொழிலாக குறிப்பிடப்படுகிறது.
வழக்கறிஞர்கள் தங்களின் கட்சிக்காரருக்கு மட்டுமில்லாமல், நீதிமன்றத்துக்கும் கடமைப்பட்டுள்ளனர். நீதி வழங்குவதில், வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
நீதிமன்றத்தின் அதிகாரிகளாக இருக்கும் வழக்கறிஞர்கள், இந்த ஜனநாயக செயல்பாட்டிலும் ஒரு பகுதியாக உள்ளனர்.
எந்தவொரு வணிகத்தின் நோக்கமும் லாபம் தான்; ஆனால் சட்டத் தொழிலின் ஒரே நோக்கம், நீதி. உண்மை மற்றும் நீதியையை ஒருபோதும் வர்த்தகம் செய்ய முடியாது.
உண்மை, நீதிக்கான இந்த போராட்டத்தில், முக்கிய கூறுகளாக இருக்கும் வழக்கறிஞர்களை, ஒருபோதும் வணிகர்கள் அல்லது வர்த்தகர்களுடன் ஒப்பிட முடியாது.
இத்தகைய புனிதமான வழக்கறிஞர் தொழிலை ஒரு வணிகமாக எடுத்துக் கொள்ள முடியாது. நீதியைத் தேடி வருவோருக்கு, அதை வழங்குவது தான் சட்டத் தொழில்.
சில இணையதளங்கள், சட்டத் தொழிலை ஒரு வணிகமாக குறிப்பிட்டு, அதற்கு கட்டணம் நிர்ணயித்து வெளியிடுவது, வேதனை அளிக்கிறது.
வழக்கறிஞர் தொழிலில் உள்ள இதுபோன்ற கலாசாரம், சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும்.
வழக்கறிஞர்களை தரவரிசைப்படுத்துவது, வாடிக்கையாளர் மதிப்பீடுகளை வழங்குவது, கேள்விப்படாதது. இது, இந்த தொழிலின் நெறிமுறைகளை இழிவுபடுத்துகிறது. வழக்கறிஞர்கள், தங்கள் தொழில் கண்ணியம் மற்றும் நேர்மையை, ஒருபோதும் சமரசம் செய்யக் கூடாது.
சுற்றறிக்கை
எனவே, ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவது தொடர்பாக, விளம்பரங்கள் வெளியிடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும், நான்கு வாரங்களில், இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் வாயிலாக சட்ட சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பார் கவுன்சில் சார்பில், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
வழக்கறிஞர் சேவை தொடர்பான விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். விசாரணை ஆகஸ்ட் 20க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.