எல்லாவற்றிலும் உஷார்; எதிலும் தவறிட மாட்டேன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
எல்லாவற்றிலும் உஷார்; எதிலும் தவறிட மாட்டேன் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஆக 25, 2024 02:21 AM

சென்னை:“இனம், மொழி, மாநிலம் காக்க, எந்நாளும் உழைப்பது தான், கருணாநிதிக்கு நாம் காட்டும் உண்மையான நன்றி,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதியுள்ள, 'கலைஞர் எனும் தாய்' நுால் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இந்நுாலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினி பெற்றுக் கொண்டார்.
ஏற்புரை
அமைச்சர் உதயநிதி வரவேற்று பேசினார். குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், 'தி இந்து' குழுமம் இயக்குனர் என்.ராம் வாழ்த்திப் பேசினர். நுாலாசிரியரும் அமைச்சருமான வேலு ஏற்புரை வழங்கினார். சீதை பதிப்பகத்தின் கவுரா ராஜசேகர் நன்றி கூறினார்.
விழாவில், முதல்வர் பேசியதாவது:
அமைச்சர் வேலு எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பில் மொத்தமும் அடங்கி உள்ளது. கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்ல. தாயும் அவர் தான். வேலுவை போன்ற உடன் பிறப்புகளுக்கு தந்தையாக, தாயாக, தலைவராக இருந்தவர்.
'எ.வ.வேலு எதிலும் வல்லவர்' என, கருணாநிதி பாராட்டுவார். அவர் மனதில் நினைப்பதை, கண் அசைவின் வாயிலாக உணர்ந்து செய்பவர்களில், வேலு முதலிடத்தில் இருந்தார். எனக்கும் அதுபோல் தான் உள்ளார்.
ஆறாவது முறை தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறைகளை ஒப்படைத்தேன். கிண்டியில் பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம், ஏறு தழுவுதல் மைதானம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் போன்றவை, அவரது திறமைக்கு சாட்சியாக உள்ளன.
இவை எல்லாவற்றுக்கும் தலையாய சாதனை, கருணாநிதி நினைவிடம். அதை பார்ப்போர் எல்லாரும் வியக்கும் அளவுக்கு அமைத்தார்.
கட்சியை பொறுத்தவரை, சிலைகள் துறை, மணிமண்டபங்கள் துறை, விழாக்கள் ஒருங்கிணைப்புத் துறை, சிறப்பு மலர் தயாரிப்பு துறை, புத்தகங்கள் அச்சிடும் துறை, நினைவுப் பரிசு வழங்கும் துறை என, ஏராளமான துறைகள் அவர் வசம் உள்ளன.
படத்தில் நடித்துள்ளார்; கூத்து கட்டுவார். எதிலும் வல்லவரான வேலு, எழுத்திலும் வல்லவர் என தற்போது நிரூபித்துள்ளார். கருணாநிதியை திருக்குறளுடன் இணைத்து, இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.
'மிசா' காலத்தில் நான் தாக்கப்பட்ட நிகழ்வு, இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதை படித்த போது உணர்ச்சி வசப்பட்டேன். இப்புத்தகத்தில் அமைச்சர் உதயநிதியும் இடம் பெற்றுள்ளார்.
உண்மையான நன்றி
கருணாநிதி வரலாற்றோடு, கட்சி வரலாறும் இருப்பது நுாலின் சிறப்பு. இந்திய வரைபடத்தில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்படாத திருக்குவளை என்ற சிற்றுாரில் பிறந்த கருணாநிதிக்கு, இந்திய அரசு நாணயம் வெளியிட்டுள்ளது.
அவரது புகழை, பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதோடு, இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பதுதான், அவருக்கு நாம் காட்டும் உண்மையான நன்றி.
விழாவுக்கு வந்து, என்னை ஊக்கப்படுத்தும் வகையில், ரஜினி கூறிய அறிவுரையை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் நான் தவறிட மாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.